
உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதனின் தேவைகளுக்காக உலகத்தில் இருக்கக்கூடிய இயற்கையை பெருமளவு சுரண்டிக் கொண்டிருக்கிறோம். இதை உணர்த்துவதற்காகவே புலிகள் தினம், யானைகள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலகத்தில் புலிகள் 9 இனங்களாக இருந்துள்ளது. இன்று அதில் 3 இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. மற்றொரு மூன்று வகை இனங்கள் அழிவிற்கு மிக நெருக்கமாக உள்ளது. இந்த இனங்களில் இருக்கிற ஒரு சில நூறு புலிகள் இறந்துவிட்டால் அந்த மூன்று இனங்கள் புலிகள் இல்லவே இல்லை என்றாகிவிடும். நம்முடைய நாடுகளில் உள்ள புலிகளை ‘வங்காள புலி’ என்போம். இந்த வங்காள புலிகள் எண்ணிக்கை உலகளவில் கிட்டதட்ட 4,500 நெருக்கி இருக்கும் என்கிறார்கள். இதில், 3,000 புலிகள் இந்தியாவில் உள்ளது. 2018-ம் ஆண்டின் கணக்கெடுக்கின்படி 2,967 புலிகள் இந்திய காடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் சிக்காத புலிகளும் இருக்கலாம். அதனை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 3346 புலிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த புலிகள் தினத்தில் புலிகள் கணக்கெடுப்பு எப்படி நடக்கிறது, அதன் நோக்கம் என்பதை அதன் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மதுரையை சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறுகையில், "ஒவ்வொரு நான்கு ஆண்டிற்கு ஒரு முறையும் புலிகள் கணக்கெடுப்பு நடக்கும். 5-வது ஆண்டில் மொத்தமாக கணக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பார்கள். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 3 ஆயிரத்தை புலிகள் கடந்து இருந்தால் ரொம்ப சந்தோஷமான செய்தியாகும். நம்முடைய காடுகள் கொஞ்சம் மீட்கப்படுகிறது. காடுகளில் உள்ள உயிர்கள் சூழலும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அர்த்தமாகும்.
புலிகள் கணக்கெடுப்பு ஒரு வாரத்திற்கு காடுகளில் நடக்கும். காடுகளில் முதல் மூன்று நாட்கள் வரையரைக்கப்படாத எல்லைகளில் உள்ள பகுதிகளில் வனத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்களும் பயணிப்பார்கள். இந்த பயணத்தில் புலிகள் நேரடி கண்பார்வையில் கிடைப்பது அபூர்வமாகும். புலிகள் பாதச்சுவடுகள், எச்சங்கள், அதன் வாழ்விட எல்லைகளை குறிக்கும் குறியீடுகளை கொண்டு முதற்கட்டமாக புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது. சில இடங்களில் சிறுநீர் கழித்து வைக்கும். அதன் மனத்தை வைத்துக் கூட புலிகள் கணக்கெடுப்பை தெரிந்து கொள்ளலாம். இதற்கு பிறகு காடுகளில் மற்ற இரண்டாம் கட்ட கொல்லுண்ணிகளான செந்நாய், நரி போன்றவையும் கணக்கெடுப்போம். அதற்கு அடுத்த மூன்று நாட்களில் தாவர உண்ணிகளை பற்றியதான கணக்கெடுப்பு போகும். அதன் எச்சங்கள், வாழ்விடங்கள் கணக்கெடுக்கப்படும். தாவர உண்ணிகளின் ஒரு கூட்டம், மதிப்பீடு செய்யப்படும். இவ்வளவு தாவர உண்ணிகள் இருந்தால் இது ஒரு புலிக்கான இரையாகும் என்று புலிகள் கணக்கெடுக்கப்படும்.
அதன்பிறகு தாவர உண்ணிகள் வாழக்கூடிய சூழலில் என்னென்ன வகை தாவரங்கள் இருக்கிறது, அதில் நம்முடைய மண்ணின் தாவரங்கள் எத்தனை, அயல்நாடுகளில் இருந்து இங்கு பரப்பப்பட்ட தாவரங்கள் எத்தனை, அதில் எத்தனை வகை தாவரங்கள், நேரடியாக விலங்களுக்கும் பறவைகளுக்கும் உணவாக இருக்கிறது என்று கண்டறியப்படும். இந்த அடிப்படையில் பறவை, விலங்குகளுடைய உணவு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தாவரங்கள் எத்தனை இருக்கிறது என்று கணக்கெடுப்போம். இந்த தாவரங்களை அதிகம் உண்ணும் விலங்குகளை கொண்டும் புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது.
புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகளை பற்றிய கணக்கெடுப்பு மட்டுமே இல்லை. அது நம்முடைய சுற்றுச்சூழலின் மொத்தத்தையும், காட்டின் தன்மையையும் கணக்கெடுக்கக்கூடியது. புலிகள் கணக்கெடுப்பு ஒரு நாட்டின் உயிர் தன்மையை கணக்கெடுக்கக்கூடிய சிறப்பான செயல். புலிகள் கணக்கெடுத்தப்பின் மொத்தமாக அறிக்கை தயார் செய்வார்கள். எங்கெல்லாம் புலிகள் அதிகமாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறதோ அங்கு தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் நடமாட்டத்தை படமெடுப்பார்கள். நமக்கு மனிதனுக்கு மனிதன் எப்படி கைரேகை மாறுகிறதோ புலிகளுக்கும் அதன் உடலில் உள்ள கோடுகள் மாறும். அதனை கொண்டு புலிகள் இனத்தை அறியலாம். மேலும், எச்சத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி ஒரே மரபு வழியில் வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு புலிகள் இனம் கண்றியப்படும். காடுகள் முடியக்கூடிய இடங்களில் புலிகள் அதிகமாக இருந்தால் காடுகளை இன்னும் வளப்படுத்த வேண்டும் என்று அர்த்தமாகும். அது தவறும் பட்சத்தில் இந்த விலங்கள்-மனிதன் எதிர்கொள்ளல் நடக்கும்.
புலிகள் மனிதனை கண்டால் விலகிதான் செல்லும். அது குட்டிகளோடு இருக்கும்போதும், காயப்பட்டிருக்கும்போதும் வேட்டையாடக்கூடிய சூழல் இருக்கும்போதும் மனிதனை தாக்கக்கூடும். அதன் ஆயுட் காலம் காடுகளில் 9 முதல் 14 ஆண்டுகள் இருக்கிறது. இந்த காலத்திற்குள் அவை பல்வேறு வாழ்க்கை சவால்களை சந்திக்க வேண்டிய உள்ளது. 20 ஆண்டுகள் தற்போது புலிகள் வாழ்வது மிக கஷ்டமான விஷயமாகிவிட்டது. யானைகளுக்கு 100 ஆண்டுகள் ஆயுள் என்றால் தற்போது 35 முதல் 60 ஆண்டுகளை தொடுவதற்கு முன்பே இறந்துவிடுகிறது. 100 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதன் தற்போது 40, 45 வயதுகளில் இறந்து போனால் எப்படியிருக்குமோ அதுபோலதான் புலிகள், யானைகள் வாழ்க்கை முறையும் தற்போது மாறிவிட்டது.
மனிதனுக்கு ஏற்படக்கூடிய அழிவு அதை அவனே நிர்ணயம் செய்கிறான். ஆனால், விலங்கிற்கு ஏற்படக்கூடிய அழிவுகள் மனிதனால் கொண்டு வரக்கூடியவை. இயற்கை விலங்குகளை மட்டுமில்லாது எந்த உயிரினைத்தையும் கைவிடாது. மனிதனின் தவறான புரிதல், நடவடிக்கையாலே அசாம்பாவிதங்கள் நடந்து அதிக எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட உயினங்கள் அழிகிறது. அதன் அழிவின் பின்விளைவுகள் உடனே தெரியாது. 25 ஆண்டுகள், 50 ஆண்டுகளுக்கு பிறகு தெரியும். அப்படி ஒரு விளைவுகள் நடந்துவிட்டால் திரும்ப இயற்கையை மீட்டு கொண்டு வர முடியாது. அதற்காகத்தான் காடுகளையும், அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்றார்.