
காரைக்கால் கார்னிவெல் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் கார்னிவெல் திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த திருவிழாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் மாடு, குதிரை வண்டி பந்தயம், படகுப்போட்டி, மராத்தான் உட்பட பல போட்டிகளும், மலர்க்கண்காட்சி, உணவுத் திருவிழா, கைவினைப் பொருட்கள் கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. அதையொட்டி நேற்று காணும் பொங்கல் திருவிழா நாளில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இரவு வரை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
இத்திருவிழாவின் இறுதி நாளான இன்றும் பல்வேறு முக்கிய போட்டிகளும், நிகழ்ச்சிகளும் காரைக்காலில் நடைபெறுகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்குகிறார். அதனையொட்டி இன்று காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.