செக்போஸ்ட்டில் வந்து நின்ற பெங்களூரு லாரி; சந்தேகத்தில் சோதனை: அதிர்ந்துபோன திண்டுக்கல் போலீஸ்

செக்போஸ்ட்டில் வந்து நின்ற பெங்களூரு லாரி; சந்தேகத்தில் சோதனை: அதிர்ந்துபோன திண்டுக்கல் போலீஸ்

பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு லாரியில் ஏற்றி வந்த 1,200 கிலோ புகையிலை பொருட்களை தனிப்பிரிவு போலீஸார்  பறிமுதல் செய்தனர். 

கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டம், கம்பம் வழியாக கஞ்சா  கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருவதாக போலீஸாருக்கு   தகவல்கள் கிடைத்து வந்தன. அதேபோல ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு அதிக போதை தரும் வீரியம் மிகுந்த கஞ்சா கடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்தன.

நவ.28, 29 ஆகிய தேதிகளில்  கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் எனும் போதை பொருள், கஞ்சா ஆயில் உட்பட இலங்கைக்கு  கடத்த முயன்ற பல  பொருட்களை போலீஸார், தனிப்பிரிவு, வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கண்காணிப்பு தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில்,  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்- கல்வார்பட்டி சோதனை சாவடியில் எஸ்பி தனிப்பிரிவு போலீஸார் நேற்றிரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை கடக்க முயன்ற பெங்களூரு பதிவு எண் லாரியை நிறுத்தி அதிலிருந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர். அதில் 1,200 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பெங்களூருவைச் சேர்ந்த அப்பு, சச்சின் ஆகிய இருவரை  பிடித்தனர். 

பறிமுதல் செய்த புகையிலை பொருட்களுடன்,  இருவரையும் கூம்பூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை ராமேஸ்வரம் கொண்டு வந்தது தெரிந்தது. இப்பொருட்களை ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக  எடுத்து வரப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in