ஒப்பந்தப் பண்ணை முறையை புகையிலை சாகுபடியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

ஒப்பந்தப் பண்ணை முறையை
புகையிலை சாகுபடியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவாசாயிகள் மத்தியில் எதிர்ப்பு குறையாத நிலையில், புகையிலை சாகுபடியாளர்களும் ஒப்பந்தப் பண்ணை முறையைப் புகையிலை சாகுபடியில் புகுத்த வேண்டாம் என்று புதிதாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன?

போதை வஸ்து

இந்தியாவில் புகையிலை சாகுபடி அதிகம் நடப்பது கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே. புகையிலைக்குத் தண்ணீர் அவசியம். நீர்வளம் உள்ள இடங்களில் விளைவிக்கப்படும் புகையிலை, பணப் பயிராகும். இந்தியாவில் விளையும் விர்ஜீனியா ரகப் புகையிலைக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி அதிகம். லாகிரி (போதை) வஸ்துவாகப் பெருமளவில் புகழ்பெற்றது புகையிலை. புகையிலையை அப்படியே மென்று சாப்பிடுவதுடன் சிகரெட், சுருட்டு ஆகியவற்றில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். புகையிலையைக் கொண்டு சிகரெட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள் அவற்றின் தரம் மற்றும் மலிவான விலைக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. மறுபுறம், உலக அளவில் புகையிலை பீடி, சிகரெட், சுருட்டு பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சார இயக்கங்கள் வலுவாக இருக்கின்றன. புகையிலையால் புற்றுநோய் வருகிறது என்பதால் புகையிலைப் பொருட்களின் விற்பனை, விளம்பரம் ஆகியவற்றுக்கு இந்திய அரசு ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

புகையிலை சாகுபடியாளர்கள் வசதியானவர்கள். வலுவான அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். இந்நிலையில் அவர்களிடமும் ஒப்பந்தப் பண்ணை முறையில் சாகுபடி செய்யுங்களேன் என்று மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும் திட்டத்திலும் அரசு இருக்கிறது.

ஒப்பந்தப் பண்ணை முறை என்றால் என்ன?

தற்போது ஏல முறையில் புகையிலையை விவசாயிகள் விற்கின்றனர். இது வெளிப்படையான சந்தை நடைமுறை. அதிகப் பணத்துக்கு ஏலம் கேட்போருக்குப் புகையிலை விற்கப்படும். இதனால் எத்தனை பேர் சந்தையில் இருந்தாலும் இறுதியாக ஒப்புக்கொள்ளப்படும் விலையைக் கொடுத்தால்தான், தங்களுக்கு வேண்டிய புகையிலையை வாங்கிக்கொள்ள முடியும். சிறு விவசாயிகளுக்கும் இதில் பணம் உடனடியாகக் கைக்குக் கிடைத்துவிடும். புகையிலை அதிகம் விளைந்தாலும் குறைவாக விளைந்தாலும் சாகுபடியாளர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை.

ஒப்பந்தப் பண்ணை முறையில், சாகுபடியாளர்கள் தங்களுக்கு வேண்டிய இடுபொருட்களை ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிறுவனத்திடமிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். ஒப்புக்கொண்ட விலைக்குப் புகையிலையை விற்றுவிட வேண்டும். புகையிலை சாகுபடி பொய்த்துவிட்டால், நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை விவசாயிகள்தான் ஈடுகட்ட வேண்டும். ஆரம்பத்தில் இடுபொருட்கள் விலை குறைவாகவும் நிபந்தனையின்றியும் கிடைத்துக்கொண்டிருக்கும். நாளாக நாளாக நிபந்தனைகள் அதிகமாகும். அமோக விளைச்சல் என்றால் ஒப்புக்கொண்ட விலையைவிட குறைவாகத் தருவதாகக் கூறுவார்கள், விளைச்சல் முழுவதையும் வாங்கிக்கொள்ள மறுப்பார்கள் அல்லது கால தாமதம் செய்து பணத்தைத் தருவார்கள். இதனால்தான் ஒப்பந்தப் பண்ணை முறையைப் புகையிலை சாகுபடியாளர்கள் எதிர்க்கிறார்கள்.

எதிர்ப்பின் பின்னணி

உலக அளவில் புகையிலை சாகுபடிக்கு சுகாதாரத் துறை மூலம் எதிர்ப்புகள் அதிகமாகிக்கொண்டேவருகிறது. மக்களைப் புற்றுநோயில் தள்ளும் புகையிலை சாகுபடியை ஊக்குவிக்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புகையிலை சாகுபடிக்குத் தானாகவே சந்தையும் சந்தை நடைமுறைகளும் உருவாகி சுமுகமாக எல்லாம் நடந்து வருகிறது.

இந்தச் சூழலில் அரசு முன்வைத்திருக்கும் யோசனையை இந்திய புகையிலை வாரியம்தான் முதலில் எதிர்த்திருக்க வேண்டும்; என்ன காரணத்தாலோ அது மவுனம் சாதிக்கிறது என்று விவசாயிகள் வருத்தப்படுகின்றனர். புகையிலை சாகுபடியில் பிரச்சினைகள் ஏதுமில்லாத நிலையில் - நாங்களும் எந்த முறையீட்டையும் வைக்காதபட்சத்தில், அதிகாரிகள் ஏன் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பண்ணை முறை புகையிலை சாகுபடியைப் புகுத்த நினைக்கிறார்கள் என்று விவசாயிகள் கேட்கின்றனர்.

புகையிலை சாகுபடிக்கு வங்கிகள் எளிதில் கடன் கொடுக்காது. கொள்முதல் செய்கிறவர்கள் அதற்கான பணத்தைத் தாமதமாகத்தான் தருவார்கள். பாசனத்துக்கு சில பகுதிகளில் தண்ணீர் போதவில்லை, மின்சார விநியோகமும் சீராக இருப்பதில்லை, தரமுள்ள விதைகள் தொடர்ந்து கிடைக்காது என்பவை ஒப்பந்தப் பண்ணை முறையை விவசாயிகள் எதிர்ப்பதற்கு பிற முக்கிய காரணங்களாகும்.

அதேவேளையில் ஒப்பந்தப் பண்ணை முறையில், புகையிலை சாகுபடி செய்யும் நிலங்களில் வருவாய் 11 சதவீதம் அதிகமாகவே இருக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு ஆகும் சாகுபடிச் செலவு 13 சதவீதம் குறைகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே, லாப விகிதம் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு நல்ல தரத்தில் புகையிலை கிடைப்பதற்காக, தரமான விதைகளைத் தருவதுடன் தொழில்நுட்பங்களையும் நவீனமாகக் கையாள உதவும் என்பதாகும்.

அதிகரிக்கும் அச்சம்

ஆனால், புகையிலை சாகுபடிக்குப் போதிய நிலங்கள் இல்லை. ஒருமுறை புகையிலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டால் அதிலிருந்து வெளிவர நீண்ட காலமாகும். புகையிலை சாகுபடி செய்ய முடியாமல் போய்விட்டால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், நிறுவனத்துக்கும் ஏதாவது ஈடுகட்ட வேண்டியிருக்கும். இதனாலும் விவசாயிகள் ஒப்பந்தப் பண்ணை முறையை எதிர்க்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகளுக்கு நிறுவனங்கள் ஒப்பந்தப் பத்திரங்களில் என்ன எழுதி வாங்கிக்கொள்கின்றன என்பதே தெரியாது.

நாளடைவில், நிலத்தையே அந்நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற நேரும் என்ற அச்சம் விவசாயிகளிடம் அதிகரித்து வருகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பண பலம், அரசியல் செல்வாக்கு காரணமாக எல்லா நாடுகளிலும் இத்தகைய அச்சம் தூக்கலாகவே இருக்கிறது. இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரிடமும் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என அரசுக்குப் புகையிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் ஏறத்தாழ இதேபோன்ற எதிர்ப்புதான் நிலவுகிறது. “நாங்களே எதிர்க்கும் சட்டங்களை, எங்கள் நலனுக்கானவை எனும் பெயரில் அரசு ஏன் திணிக்கிறது?” என்பதே விவசாயிகளின் கேள்வி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in