‘மயோனைஸ்’ மர்மம்: கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும் தடை வருமா?

‘மயோனைஸ்’ மர்மம்: கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும் தடை வருமா?

அச்சுறுத்தும் வகையிலான உடல்நல பாதிப்புகளுக்கு வித்திட்ட ’மயோனைஸ்’க்கு, கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த உணவுப் பொருளுக்கு தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி கோரிக்கையாக எழுந்துள்ளது.

கேரளத்தின் உணவகங்களில் பரிமாறப்படும் துரித உணவு ரகங்கள் கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சவர்மா உண்டதில் தொடங்கிய இந்த விவகாரம் அடுத்தடுத்து இதர உணவு ரகங்களிலும் தாவி வருகிறது. அண்மையில் மயோனைஸ் உணவுப் பொருளை இந்த சர்ச்சை மையமிட்டது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட கேரள உணவு பாதுகாப்புத் துறை, பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உணவுக்கு மாநிலத்தில் தடை விதித்தது.

கேரளாவின் பல்வேறு நகரங்களின் உணவு விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், மயோனைஸ் தயாரிப்பிலும், சேர்த்து வைத்திருந்து பரிமாறுவதிலும், உடலுக்கு அச்சுறுத்தலாகும் அம்சங்கள் இருப்பதாக கண்டறிந்தார்கள். பொதுவாக மயோனைஸ் உடனுக்குடன் தயாரித்து பயன்படுத்துவதை விட, நாள்கணக்கில் வைத்திருந்தும் பயன்படுத்தும் போது மனித உடலுக்கான அதன் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன.

சவர்மா, மயோனைஸ் உடன்
சவர்மா, மயோனைஸ் உடன்

மயோனைஸ் என்பது க்ரில் மற்றும் தந்தூரி சிக்கன் உடன் சுவைக்காக சேர்த்து பரிமாறப்படுகிறது. சர்ச்சைக்கு ஆளான சவர்மா தயாரிப்பில் இதன் பங்கும் உள்ளது. பீஸா, பர்கர் உள்ளிட்ட வெளிநாட்டு ரகங்களுடன் மயோனைஸ் சேர்த்து உண்போர் உண்டு. மயோனைஸ் தயாரிப்பில் முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை, எண்ணெய் ஆகியவை பிரதான பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த முட்டை சமைக்கப்படாதது என்பதால், நாட்கணக்கில் வைத்துப் பரிமாறும் உணவுகளால் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் எழுகிறது.

பச்சை முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் தவிர்த்து தாவர எண்ணெய் மற்றும் முறையாக சமைக்கப்பட்ட முட்டையில் தயாராகும் மயோனைஸ் ரகங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை இனம்பிரித்து அறிந்தபின்னர் உட்கொள்வது வாடிக்கையாளர் மத்தியில் இயலாத காரியம். மேலும் சுவையிலும் அவை பின்தங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மயோனைஸ்
மயோனைஸ்

இந்த மயோனைஸ் இயல்பே இவ்வாறு பிரச்சினையாக இருக்க, அவை கெட்டுப்போகாது இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களும், மயோனைஸ் உட்கொள்வோரை பதம் பார்க்கின்றன. தனிநபர்களைப் பொறுத்தளவில் இந்த பாதிப்பின் அச்சுறுத்தல் வீரியமடையவும் செய்கின்றன. இதுதவிர, அதிக கலோரிகள் கொண்ட மயோனைஸ் உட்கொள்ளும் குழந்தைகள் நாளடைவில் புதுவித ஆரோக்கிய கேடுகளுக்கு ஆளாகிறார்கள். கேரள அரசின் இந்த நடவடிக்கை, உணவகங்களில் பரிமாறப்படும் மயோனைஸ் மட்டுமன்றி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் மயோனைஸ் குறித்தும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேரளத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சவர்மா சர்ச்சைகள் எழுந்தபோது, தமிழக சுகாதாரத்துறை உடனடியாக அவற்றுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அரசின் அறிவிப்பால் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்றார்கள். இந்த வரிசையில் மயோனைஸ் குறித்தும், தமிழ்நாட்டிலும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in