
அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, தமிழகத்தை சேர்ந்த ராணுவ அலுவலரின் குடும்பத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில், ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த். இது தொடர்பான தகவல் வெளியானதுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேதனை மற்றும் இரங்கலை இன்று காலை தெரிவித்திருந்தார்.
மேலும் வீரமரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு, தமிழக அரசின் சார்பில் அஞ்சலி செலுத்துமாறு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை முதல்வர் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கான நிதியுதவியையும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, மேஜர் ஜெயந்த் குடும்பத்தாருக்கு நிதியுதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது.