'ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்?’ : திரிணாமுல் அமைச்சரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்

அகில் கிரி(இடது)
அகில் கிரி(இடது)

ஜனாதிபதி திரௌபதி முர்மு தோற்றத்தை முன்வைத்து தரக்குறைவாக பேசிய, மேற்கு வங்க அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அகில் கிரி என்பவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பாஜக மேற்கு வங்க தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் மக்களிடையே பேசிய அகில் கிரி புதிய சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறார். முன்னதாக தனது தோற்றம் மற்றும் ஆடையை முன்வைத்து நகையாடியதாக சுவேந்து அதிகாரிக்கு எதிராக முழங்கிய அகில் கிரி, பதிலடி என்ற பெயரில் சுவேந்து அதிகாரியை முதலில் தாக்கினார். பிறகு ஜனாதிபதி திரௌபதி முர்மு தோற்றம் குறித்தும் ஆட்சேபகரமான வார்த்தைகளை இரைத்தார். இது மேற்கு வங்கத்துக்கு அப்பாலும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

’ சுவேந்து அதிகாரி எனது தோற்றத்தை விமர்சித்து வருகிறார். நீங்கள் எல்லோரும் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா? தோற்றத்தை வைத்து எவரையும் நாங்கள் மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் நமது ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார் பாருங்கள்..’ என்று அகில் கிரி தொடர்ந்து பேச, சுற்றியிருப்பவர்கள் கெக்கலிக்கிறார்கள். இந்த வீடியோ துணுக்கை சமூக வலைதளங்களில் பாஜகவினர் வெகுவாய் பரப்பி வருகிறார்கள்.

முதல் பழங்குடி இனத்தவராகவும், இரண்டாவது பெண்ணாகவும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வீற்றிருக்கும் திரௌபதி முர்முக்கு எதிரான திரிணாமுல் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

’திரிணாமுல் கட்சியும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் பழங்குடி இனத்தவருக்கு எதிரானவர்கள் என்பதை பலமுறை நிரூபித்து வருகிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டபோது அவருக்கு ஆதரவளிக்க மறுத்தார் மம்தா. இப்போது மம்தாவின் சகாக்கள் ஜனாதிபதியின் தோற்றத்தை நகையாடும் அளவுக்கு மோசமாகி வருகிறார்கள். இவையனைத்தும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியலுக்கு உதாரணம்’ என்று மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளில் ஒருவரான அமித் மால்வியா வறுத்தெடுக்கிறார்.

அகில் கிரி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அகில் கிரியின் பேச்சு பொறுப்பற்றது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in