`அது விவசாய நிலம்; பதிவு செய்ய 1 லட்சம் வேண்டும்'- பேரம் பேசிய சார்பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!

திருவெறும்பூர் சார் பதிவாளர் பாஸ்கர்
திருவெறும்பூர் சார் பதிவாளர் பாஸ்கர்

ரியல் எஸ்டேட் பிரமுகரிடம் லஞ்சம் பெற்ற திருவெறும்பூர் சார் பதிவாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் தினந்தோறும் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் புரண்டு கொண்டிருப்பதாக பொதுமக்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இன்று நண்பகல் திருச்சி திருவெறும்பூரில் பத்திரப்பதிவு செய்ய வந்தவரிடம் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து  திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அணுகியுள்ளார். 

அங்குள்ள சார் பதிவாளர் பாஸ்கரன், அந்த நிலத்தை  விவசாய நிலமாக 47 (A) படி பத்திரப் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான்  பதிவு செய்ய இயலும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டனை சந்தித்து  இதுகுறித்து  புகார் கொடுத்தார்.

அவரது புகாரையடுத்து  லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் சென்ற அசோக்குமார், அதனை  சார்பதிவாளர் பாஸ்கரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை  கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து துறை ரீதியான நடவடிக்கைகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் பரிந்துரைத்தார். 

இன்று இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற திடீர் ரெய்டால் ஒட்டு மொத்த திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலங்களிலும் அதீத பரபரப்பு காணப்பட்டது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in