
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்த பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகள் காயத்ரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். தற்போது ஐந்தாம் ஆண்டு படிப்பாக ஹவுஸ் சர்ஜன் என்ற பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கல்லூரி விடுதியில் தனி அறையில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. அறையை விட்டும் வெளியே வரவில்லை. அதனால் அவரது நண்பர்கள் காயத்ரி அறையின் கதவை வெகுநேரம் தட்டி உள்ளனர். அப்படியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, சந்தேகமடைந்த நண்பர்கள், அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக காயத்ரியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
காயத்ரி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக காயத்ரி குறிப்பிட்டுள்ளதாக கூறும் போலீஸார் கடிதத்தை வெளியிட மறுத்து விட்டனர்.