ஆண் குழந்தை பாக்கியம் விளம்பரம் பாலின சமத்துவத்திற்கு எதிரானது: திருவடிக்குடில் சுவாமிகள்

திருவடிக்குடில் சுவாமிகள்  பேசுகிறார்.
திருவடிக்குடில் சுவாமிகள் பேசுகிறார்.ஆண் குழந்தை பாக்கியம் விளம்பரம் பாலின சமத்துவத்திற்கு எதிரானது: திருவடிக்குடில் சுவாமிகள்

இந்த வழிபாட்டுத் தலத்தில் பிரார்த்தனை செய்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது போன்ற பிரச்சாரங்கள் பாலின சமத்துவத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைபணி  திருக்கூட்டத்தின் நிறுவனர்  திருவடிக்குடில் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழக இமாம்கள் பேரவை நேற்று  நடத்திய மீலாது விழா சமய நல்லிணக்க மாநாட்டில் திருவடிக்குடில் சுவாமிகள்  பேசுகையில், "நபி (ஸல்)  ஒருமுறை தான் பிறந்தார்,  ஒரு முறைதான் இறந்தார்.  ஆனால் ஒவ்வொரு மீலாது விழா மூலமாகவும் சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

'பழமையான மொழி தமிழ் என்பதில் நமக்கு கர்வம் வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உண்மைதான் இங்கு தமிழும் இருக்கிறது, கர்வமும் இருக்கிறது. அதனால் தான் தாமரை மீது எங்களுக்கு ஆர்வம் இல்லை.

மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி இந்த மாநாடு நடக்கிறது. இவ்வேளையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இங்கு இரண்டு தீவிரவாதம் உள்ளது. ஒன்று உலகளாவிய தீவிரவாதம், மற்றொன்று இந்துத்துவா தீவிரவாதம். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லப்படுவது இந்துத்துவா தீவிரவாதிகள் தங்கள் இயலாமையினால் உருவாக்கிய சொல். 

சேலத்தில் தமிழக இமாம்கள் பேரவை நேற்று  நடத்திய மீலாது விழா
சேலத்தில் தமிழக இமாம்கள் பேரவை நேற்று நடத்திய மீலாது விழா

இன்று பாகிஸ்தான் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதல் கூட உலகளாவிய தீவிரவாத செயல் தான். பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு அல்ல,  நபி அவர்களுடைய வழிகாட்டுதலையும் மார்க்கச் சட்டங்களையும் பின்பற்றாதவர்கள் இஸ்லாமியராக இருக்க முடியாது என்று  இங்குள்ள பல இஸ்லாமிய அறிஞர்களும் சொல்வதுண்டு.

சமயப்பணிகள் தேச ஒற்றுமைக்காகவும் பணியாற்றும் இமாம்கள், உலமாக்கள் போன்ற மார்க்க அறிஞர்கள் முகத்திலே மகிழ்ச்சியை காண முடியும். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் முழுமை அடைந்துள்ளது என்று பொருள் அல்ல. சமய, சமூகப் பணிகளால் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதே இந்த மகிழ்ச்சியின் காரணம்.

'அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்; இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே' என்றார் தாயுமான சுவாமிகள். கிரேக்க அறிஞர்  ப்ளேட்டோவும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். மற்றபடி தனிப்பட்ட முறையில் இமாம்கள், ஆலிம்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது பாதுகாப்பதில் நாம் அவர்களோடு இருக்க வேண்டும்.

பாலின சமத்துவம் என்பது இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்து வருகிறது. நபிகள் நாயகம் உள்ளிட்ட எத்தனையோ பெரியோர்களின் வலியுறுத்தலாலும், வழிகாட்டுதலாலும் இன்று ஓரளவு நாம் பாலின சமத்துவத்தை அடைந்திருந்தாலும் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

கடந்த 2022 நவம்பர் மாதம் சேலம் அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண்குழந்தைகளையும், வறுமையின் காரணமாகவும் குறை பிரசவம் என்பதாலும்  பெற்றோர்கள் மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த குழந்தைகளை சமூகநலத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து  பாதுகாத்து வந்ததாக நாளிதழ் செய்தி மூலம் அறிந்து கொண்டோம்.

மேலும், ஒரு சில வழிபாட்டுத் தலங்களில் மக்களின் இறை நம்பிக்கையை  பயன்படுத்தி, இங்கு பிரார்த்தனை செய்தால் ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று  விளம்பரங்களையும், பிரச்சாரங்களையும் முன்னெடுக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சாரங்கள் பாலின சமத்துவத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும். ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டு நோக்கங்களை தவிர்ப்போம். 

இந்தியா உலக ஜனநாயக நாடுகளின் தாய் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம், இதுபோன்று கூட்டங்கள் மூலமாக  பாதுகாக்கப்படும் ஜனநாயக உரிமையும்,  வளர்க்கப்படும் மனிதகுல ஒற்றுமையும் ஆகும். சிலர் இதற்கு உலை வைக்கப்பார்க்கிறார்கள். அது நடக்காது. மென்மேலும் பரஸ்பரம்  அன்பும், அமைதியும், ஒற்றுமையும், சமய நல்லிணக்கமும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்" என்று திருவடிக்குடில் சுவாமிகள் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in