ஆசிரியர் பணியை துறந்துவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்: திருப்பூர் ஆச்சரியம்!

ஆசிரியர் பணியை துறந்துவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்: திருப்பூர் ஆச்சரியம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆசிரியை பணியை துறந்துவிட்டு, தனியொரு பெண்ணாக விவசாயத்தில் சாதனை புரிந்து வருகிறார் செல்வி.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வசித்துவருபவர் செல்வி(42). அதே பகுதியில், சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தில் தனி ஒரு பெண்ணாக விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் பெண் ஒருவரே விவசாயத்தில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டுவருவது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் முடிந்த பிறகு தாமோதரன் செல்வியை பி.ஏ. எம்.எட் வரை படிக்க வைத்துள்ளார். பின்னர் 10 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் ஆங்கில பாடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், கணவருடன் சேர்ந்து அவர் விவசாயத்தையும் கற்றுக்கொண்டுள்ளார்.

தனது விவசாய பணிகள் குறித்து பேசிய செல்வி, தனது கணவர் கொடுத்த ஊக்கத்தினால் பட்டம் பெற்று ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அவர் இறந்த பிறகு விவசாயத்தில் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறேன். தென்னை, எலுமிச்சை, மக்காச்சோளம் மற்றும் மிளகாய் பயிரிட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளேன். எனக்கு கார் மற்றும் பைக் ஓட்டத்தெரிந்ததால் நானே காலை சுமார் 4 மணி அளவில் விளைச்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னம்பாளையம் சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவருகிறேன் என தெரிவித்தார்

செல்வியின் மகன் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனி ஒரு பெண்ணாக விவசாய நிலத்தில் காலூன்றி நாற்று நட்டு, களை எடுத்து, விளைச்சல் கண்டு சாதனை புரிந்து பெண் விவசாயியாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். திருப்பூர் பனியன் துறையில் மட்டுமின்றி விவசாயத்திலும் முன்னேறி வருவதற்கு செல்வி ஒரு எடுத்துக்காட்டு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in