பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் அம்மாவட்ட பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலானது (06030) ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றுசேரும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிவரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலானது (06029) ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றுசேரும்.

இந்த ரயிலானது சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழ்க்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். மறுமார்க்கத்திலும் இதேபோல் நின்றுசெல்லும்.

இந்த ரயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிர்சாதன படுக்கைப் பெட்டி, இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதனப் படுக்கைப் பெட்டி, ஏழு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்புப் பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெட்டியும் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in