வேலை விட்டு வரும் போதே விஷம் குடித்து விட்டேன்… மனைவிடம் கண்கலங்கிய மின்வாரிய செயற்பொறியாளர்: நடந்தது என்ன?

தற்கொலை செய்து கொண்ட சதீஷ்குமார்.
தற்கொலை செய்து கொண்ட சதீஷ்குமார்.

திண்டிவத்தில் விஷம் குடித்து மின்வாரிய செயற்பொறியாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். விழுப்புரம், கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் பணி முடிந்து சதீஷ்குமார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என்று அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணி முடித்து வரும்போதே விஷம் குடித்துவிட்ட வந்ததாக கதறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது திருச்சி அருகே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் நடத்தினர். மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளர்களை அலுவலகப்பணிக்கு அழைக்க தலைமை பொறியாளர் உத்தரவிடவேண்டும் என்பது விதி. ஆனால் அந்தந்த துணை மின் நிலைய அதிகாரிகள் தனிச்சையாக பணியை மாற்றி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மின் விநியோகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் களப்பணிக்கு அனுப்ப மின்வாரிய நிர்வாகம் முடிவெடுத்தது. இதனால் அனைவரும் கடந்த சில நாட்களாக களப்பணிக்கு , அலுவலக பணியில் உள்ளவர்களை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் சில பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் குரல் கொடுத்துள்ளது. இதனால் தங்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.

இதனால் பணிச்சுமை அதிகமாகி, மனதளவில் பலவீனப்பட்டதால் இந்த முடிவை சதீஷ்குமார் எடுத்து இருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் வேறு ஏதும் தனிப்பட்ட பிரச்சினைகளால் அவர் தற்கொலை செய்தாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in