ரயில்வே போலீஸ்காரரை சுற்றி வளைத்து தாக்குதல்; வாக்கி டாக்கியை உடைத்து கொலைமிரட்டல்: சிசிடிவியால் சிக்கிய 3 பேர்

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மயிலாடுதுறையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரரை  தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்து கொலைமிரட்டல் விடுத்த மூன்று  இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில்  ரயில்வே பாதுகாப்புபடை தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பக்கிரிசாமி(47). தீபாவளியையொட்டி ஊருக்கு வந்திருந்தவர்கள் பலரும் சென்னை திரும்பியதால் நேற்று  மயிலாடுதுறை  ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

அப்போது  ஒன்றாவது பிளாட்பாரத்தில் சிலர் நின்றுகொண்டு கூச்சலிட்டு சத்தம் போட்டு மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பக்கிரிசாமி, அந்த வாலிபர்களை அமைதி காக்கும்படியும்,  அல்லது ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும்படியும் கூறியிருக்கிறார்.  

ஆனால் வாலிபர்கள் அதற்கு உடன்படவில்லை.  காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர்கள் திடீரென்று பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பிடுங்கி கீழே  போட்டு உடைத்ததோடு அவரை தாக்கி,  கீழே தள்ளிவிட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதன் பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே இருப்புபாதை காவல்நிலையத்தில் பக்கிரிசாமி புகார் அளித்தார். 

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த  இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ முத்துக்குமரசாமி உள்ளிட்ட இருக்குப்பாதை போலீஸார் தனிப்படை அமைத்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவர்களை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தேடிவந்தனர். இதன் மூலம்  மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு கங்கை நகரை சேர்ந்த விஜய்(21), அஜித்குமார்(20), கிட்டப்பா தெருவை சேர்ந்த என்.விஜய்(22) ஆகிய அந்த  மூன்று பேரையும் அடையாளம் கண்டு  கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in