நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மூன்று பெண் பக்தர்கள் சாவு: ஒருவரை தேடும் பணி தீவிரம்

வாசுகி
வாசுகி

கோயிலுக்குச் சென்று திரும்பும் போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மூன்று பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். வெள்ளம் அடித்துச் சென்ற ஒரு பெண்ணைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

விமலா
விமலா

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளிமண்டலப் பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோயிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களைத் தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அந்த கோயிலில் தீபவழிபாடு நடந்து வந்தது. இதனால் இந்த மாதம் முழுவதும் கோயிலில் கூட்டம் அதிகம் காணப்படும். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயில், சிறப்பு வழிபாடு நாட்களில் மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

சுசீலா
சுசீலா

கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றிருக்கிறது. நீலகிரி மாவட்டம் எப்பநாடு, கடநாடு, சின்னகுன்னூர், பேரகணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோயிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றைக் கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோயிலுக்குச் செல்வார்கள்.நேற்று மாலையும் அந்த கோயிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

ஆனிக்கல்‌ மாரியம்மன்‌கோயிலில்‌ கார்த்திகை மாத பூஜை செய்வதற்காக கடநாடு கிராமம்‌, ஜக்கலோரை பகுதியிலிருந்து சுசீலா(56), விமலா(35), சரோஜா(65) மற்றும் வாசுகி(45) ஆகியோர்‌காரில் சென்றனர்‌. பூஜை முடிந்து தங்களது இல்லத்துக்கு திரும்புவதற்காக கெதறல்லா ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, ஐனீஸ்‌ தரைப்பாலத்தின்‌வழியாக இரவு 7 மணியளவில்‌ஆற்றில்‌வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை அறியாமல் முதலில் கடக்க முயன்ற நான்கு பெண்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாகப் பின்வாங்கியுள்ளனர். வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சரோஜா
சரோஜா

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கூட்டாக இணைந்து பத்திரமாக மீட்டனர். ஆற்றில்‌அடித்துச்‌செல்லப்பட்ட நபர்களை தீயணைப்பு துறையினர்‌, வனத்துறையினர்‌ மற்றும் ‌காவல்‌துறையினர்‌ தேடும்‌ பணியில் ‌ஈடுபட்டனர்‌.

இருள் சூழ்ந்த நிலையில், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது தரைப்பாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலையில் ஆற்றில்‌அடித்து செல்லப்பட்ட விமலா, சரோஜா மற்றும் வாசுகி ஆகியோரின் ‌உடல்கள்‌ கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின்‌உடல்கள்‌பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. சுசீலா என்பவரின்‌ உடலை தேடும்‌பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறியதாவது: எப்பநாடு ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதல் பல ஊர் பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5 மணியளவில் திடீரென சுமார் இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால், பூஜைகளை முடித்து விட்டு பக்தர்கள் வீடு திரும்ப முற்பட்டனர். அப்போது, 4 பெண்கள் ஆற்றை கடக்க முயற்சித்தனர். அவர்களால் தண்ணீர் வேகத்தை கணிக்க முடியவில்லை. இதில், 4 பெண்களும் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், பேரிடர் மீட்புக்குழு, வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தோம். ஆற்றில் தேடுதல் பணி நடந்தது. இருள் சூழ்ந்ததால் இன்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்’ என்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்: நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். சுசீலா என்ற பெண் நிலை தடுமாறி தண்ணீர் விழுந்த போது, விமலா, சரோஜா, மற்றும் வாசுகி அவரை தண்ணீரிலிருந்து தூக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், நான்கு பெண்களுமே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in