பள்ளியில் கொலையில் முடிந்த மோதல்; கோமாவிலேயே உயிரிழந்த மாணவன்: 3 பேர் கைது, ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

பள்ளியில் கொலையில் முடிந்த மோதல்; கோமாவிலேயே உயிரிழந்த மாணவன்: 3 பேர் கைது,  ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு இடையேயான  மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் உள்ள   அரசு மேல்நிலைப்பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மவுலீஸ்வரன்தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர்.  மூன்று  மாணவர்கள் சேர்ந்து  மவுலீஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மவுலீஸ்வரனை சில மாணவர்கள் தள்ளிவிட்டதில் பின் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்துள்ளார்.  இதையடுத்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மவுலீஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட  மூன்று மாணவர்களையும்  கைது செய்தனர். அவர்கள் மூவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு  சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 

இந்த சூழலில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கில்  சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in