லாரி மோதி டூவீலரில் வந்த மூவர் பலி: போதை தெளியும் முன் நடந்த பயங்கரம்

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்

குடிபோதையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒரத்தநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கைலாசம் மகன் முருகேசன் (35), கலியபெருமாள் மகன் இளங்கோவன் (40), மாரியப்பன் மகன் தனபால் (50). இவர்கள் மூவரும் இன்று விவசாய வேலைக்காக சென்றுவிட்டு மதியம் வேலை முடிந்ததும் டாஸ்மாக் சென்று குடித்துவிட்டு குடிபோதையில், மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஒரத்தநாட்டிற்கு வந்துக்கொண்டு இருந்தனர்.

ஒரத்தநாடு புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரத்தநாட்டில் இருந்து மணல் ஏற்றிக்கொண்ட எதிரே வந்த லாரி மீது இவர்களின் இரு சக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது. இதில், முருகேசன் மற்றும் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸார், முருகேசன், இளங்கோவன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனபாலை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனபால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் விபத்தில் பலியாகி உள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in