பிள்ளைகளின் போக்கில் மாற்றம்; போலீஸிடம் முறையிட்ட பெற்றோர்கள்: சிக்கியது போதை மாத்திரை கும்பல்

பிள்ளைகளின் போக்கில் மாற்றம்; போலீஸிடம் முறையிட்ட பெற்றோர்கள்: சிக்கியது போதை மாத்திரை கும்பல்

மதுரையில் பள்ளிச் சிறாருக்கு போதை மாத்திரை சப்ளை செய்த மருந்துகடை உரிமையாளர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளைக் குறிவைத்து ஒரு கும்பல் போதைப்பொருள் சப்ளை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து சில மாணவ, மாணவிகளின் பெற்றோரும் காவல்துறையினரிடம் தங்கள் பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரிவதாகத் தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் இதுதொடர்பாக விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலணி ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலக்கால் மெயின்ரோடு அருகே ஒரு கும்பல் பள்ளியை ஒட்டி போதை மாத்திரை சப்ளை செய்வதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் கையில் 28 போதை மாத்திரைகளுடன் நின்று கொண்டிருந்த மூவரைக் கைது செய்தனர். அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரித்தபோது, “துவரிமான் முனியாண்டி கோயில் தெருவைச் சேர்ந்த ரகு(28), கணேசபுரம் முத்து(28), எஸ்.எஸ்.காலனி அருண் சக்கரவர்த்தி ஆகியோர் எனத் தெரியவந்தது. இதில் அருண் சக்கரவர்த்தி ரஷ்யாவில் டாக்டருக்குப் படித்து இடை நின்றவர்.

இந்தக் கும்பல் ஆப்ரேசனுக்குப் பின் மருத்துவர்கள் கொடுக்கும் வலி நிவாரணி மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகள் சரளமாக மருந்துக்கடைகளில் கிடைக்கும் சில மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தச் சொல்லி விற்றதாக வாக்குமூலம் கொடுத்தனர். தொடர்ந்து போலீஸார் இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in