பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது தாக்கிய மின்னல்: மாணவர்கள் உட்பட மூவர்  உயிரிழப்பு

பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது தாக்கிய மின்னல்: மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் அருகே மின்னல் தாக்கியதில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் இருவர் உட்பட  மூவர்  உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் அருகே பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சஞ்சய்வது (18), மகள் சஞ்சனா(16). இவர்கள் இருவரும் திருப்புனவாசலில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்ததும் இவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக  பழனிசாமியின் தம்பி  இளையராஜா(36)  இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அதில் இருவரையும் ஏற்றுக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டு இருந்தார். 

லேசான மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழையில் நனைந்தவாறு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பறையத்தூர் அருகே வந்தபோது  இடி இடித்து ஏற்பட்ட மின்னல் எதிர்பாராத விதமாக  இவர்களை தாக்கியது. அதில், அந்த இடத்திலேயே இளையராஜா, சஞ்சய்வது, சஞ்சனா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். இந்த தகவல் குறித்து அறிந்ததும் அங்கு வந்த  திருப்புனவாசல் போலீஸார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in