நெல் கொள்முதல் செய்ததாகப் போலி ரசீது தயாரித்த அதிகாரிகள்: அதிரடி காட்டிய சிபிசிஐடி!

நெல் கொள்முதல் செய்ததாகப் போலி ரசீது தயாரித்த அதிகாரிகள்: அதிரடி காட்டிய சிபிசிஐடி!

வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போலி ரசீது தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் துணை மண்டல மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பயிரிடப்படும் நெல்லை, வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மூலம் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

வேலூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் துணை மண்டல மேலாளர் மற்றும் இரண்டு கண்காணிப்பாளர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமலேயே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல் போலி ரசீது தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து டிஎஸ்பி கௌதமன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி நுகர் பொருள் வாணிப கழகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது புகார்கள் உண்மையெனத் தெரியவந்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை மண்டல மேலாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் சுரேஷ்பாபு, கனிமொழி ஆகிய மூன்று பேரையும் சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in