3 நாட்களில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்!

3 நாட்களில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்!

கடந்த மூன்று தினங்களில் மட்டும் விமான மூலம் கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

திருச்சி  சர்வதேச விமான நிலையத்திற்கு  பல வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சிக்கு வரும்  பயணிகள் சிலர்  தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனால் அண்மைக்காலமாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தியுள்ளனர். 

அதனால்  கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்தது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தங்கக் கடத்தல் சம்பவங்கள்  அதிகரித்துள்ளது. அதனால் மீண்டும் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் சோதனைகளை அதிகப்படுத்தி உள்ளனர்.  

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் நேற்று முன்தினம் காலை துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.   இப்படி கடந்த 2 நாட்களில் சுமார் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது.  இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர  சோதனைக்கு உட்படுத்தினர். 

அப்போது திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை முழுமையாக  சோதனை செய்தபோது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவரிடம் இருந்து 50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம்  மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in