கரடி தாக்கி முகம் சிதைந்த மூவரின் இப்போதைய நிலை என்ன?- டீன் விளக்கம்

கரடி தாக்கி முகம் சிதைந்த மூவரின் இப்போதைய நிலை என்ன?- டீன் விளக்கம்

தென்காசி மாவட்டம், கருத்தலிங்கபுரம் பகுதியில் கரடி கொடூரமாகத் தாக்கியதில் முகம் சிதைந்த மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் இப்போதைய உடல்நிலைக் குறித்து நெல்லை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

கருத்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. டூவீலரில் மசாலாப் பொருள்களை வைத்து ஒவ்வொரு பகுதியாக சென்று வியாபாரம் செய்துவருகிறார். நேற்று சிவசைலம் பகுதியில் இருந்து பெத்தான்குடியிருப்பு நோக்கி தன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கரடி திடீரென வழிமறித்து நின்றது. அது வைகுண்ட மணியை கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

அப்போது அதேவழியாக வந்த பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சேர்ந்த நாகேந்திரன்(55), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோர் இதைப் பார்த்தனர். அவர்கள் வைகுண்டமணியைக் காப்பாற்றச் சென்றனர். அப்போது கரடி அவர்களையும் கொடூரமாகத் தாக்கியதோடு, மூவரின் முகப்பகுதியிலும் கடித்துக் குதறியது. கரடியின் கொடூரத் தாக்குதலில் மூவரின் முகம், கண் உள்ளிட்டப் பகுதிகள் சிதைந்து போயின. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிளாஸ்டிக் முக மாற்றுச் சிகிச்சைக்கு டீன் ரவிச்சந்திரன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மூவருக்கும் இன்று பிளாஸ்டிக் முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திமுக நிதி

கரடி தாக்கி மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மூவருக்கும் திமுக சார்பில் தலா 15 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்து, அவர்களின் குடும்பத்தினரிடம் இந்த நிதியை வழங்கினார். இதேபோல் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் கிராமங்களில் கரடித் தொல்லை இருப்பதாகவும் வனத்துறை மக்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in