
கடன் தொல்லையால் மனைவி, மகன், மகள் ஆகிய மூவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் பெரிய இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்-சுரேகா தம்பதி. இவர்களுக்கு 16 வயதில் யோகிதா என்ற மகளும், 11 வயதில் மோகனன் என்ற மகனும் உள்ளனர். முருகன், ஊமச்சிகுளம் அருகே உள்ள தவசிபுதூரில் கொய்யாத்தோப்பைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். மேலும், அங்குள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கி வந்தார். பலரிடமும் கடன் பெற்ற முருகன் அதனை, திருப்பி செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முருகன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து, "கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று தெரிவித்த முருகன் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதையடுத்து, தனது மகள், மகன், மனைவி ஆகியோரை ஒருவர்பின் ஒருவராக தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி விட்ட முருகன், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தார்.
தொடர்ந்து, நீச்சல் தெரிந்த முருகன் மட்டும் கிணற்றில் இருந்து வெளியே எழுந்து வந்து படியில் அமர்ந்து கொண்ட நிலையில், மனைவி, மகள், மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முருகன் தன்னிடம் தெரிவித்ததாக அவரது நண்பர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த மூன்று சடலங்களையும் மீட்டு, கிணற்றின் படியில் அமர்ந்திருந்த முருகனை மேலே கொண்டு வந்தனர். உடல்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கழுத்தில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில், இருந்த முருகனை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து அலங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.