நாளை திருப்பட்டூர் சிவனை வணங்குகிறார் சூரிய பகவான்!

நாளை திருப்பட்டூர் சிவனை வணங்குகிறார் சூரிய பகவான்!

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பங்குனி மாதத்தில், சூரிய பகவான் தன் கதிர்களில் சிவலிங்கத்திருமேனியைத் தழுவி வணங்கும் திருக்காட்சி நடைபெறுகிறது. இந்த வருடமும் பங்குனி மாதம் 15-ம் தேதி, 16-ம் தேதி, 17-ம் தேதிகளில் (மார்ச் 29, 30,31) சூரிய வழிபாட்டை தரிசிக்கலாம்.

சென்னை - திருச்சி சாலையில் பெரம்பலூருக்கும் சமயபுரத்துக்கும் நடுவே உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. பயணித்தால் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம். பிரம்மாவின் சாபம் போக்கி, பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலை சிவபெருமான் மீண்டும் வழங்கி அருளிய தலம் என்றும் ‘இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை திருத்தி அருளுவாயாக!’ என்றும் சிவபெருமான் பணித்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம். ‘விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என்று சிவபெருமான் பக்தர்களுக்காக, பிரம்மாவிடம் சொல்லி, பிரம்மாவும் தனிச்சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிற திருத்தலம் இது.

திருப்பட்டூரில் அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம். பிரம்மாவுக்காக, தன் கணவரான ஈசனிடம் உமையவள் சிபாரிசு செய்தாளாம். அதனால், இங்கே உள்ள அம்பாளுக்கு ஸ்ரீபிரம்மசம்பத் கெளரி எனும் திருநாமம். வாழ்வில், இந்தத் தலத்துக்கு ஒரேயொரு முறையேனும் வந்து பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மசம்பத்கெளரியையும் பிரம்மாவையும் தரிசித்து வழிபட்டால், நம் தலையெழுத்து மாற்றி அருளப்படும். பட்ட கஷ்டங்களெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.

இத்தனை பெருமைக்கு உரிய திருப்பட்டூர் தலத்தில் மற்றுமொரு அதிசயமாக பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது சூரிய வழிபாடு. இரவுகளில், சூட்சுமரூபமாக வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் இங்கே சிவ வழிபாடு செய்வதாக ஐதீகம். வருடத்தில் பங்குனி மாதத்தில், 15, 16, 17-ம் தேதிகளில் காலையில் 6.10 மணி முதல் 6.45 மணி வரை, சூரியக்கதிர்களும் சூரிய வெளிச்சமும் பிரம்மபுரீஸ்வரரின் சிவலிங்கத் திருமேனி மீது பட்டு ஜொலிக்கும் அற்புதத்தைத் தரிசிக்கலாம். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே இப்படியொரு அதிசய அபூர்வ வழிபாடு நடைபெறுகிறது என்பதுதான் ஆச்சரியம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

பொதுவாகவே, திருப்பட்டூர் தலத்துக்கு வருவதே புண்ணியம். அதிலும் நம் நட்சத்திர நாளிலோ குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமைகளிலோ இங்கு வந்து வழிபட்டு, பிரம்மாவின் பத்மபாதத்தில் நம் ஜாதகத்தை வைத்து பிரார்த்தனை செய்வது எண்ணிலடங்காத பலன்களை வழங்கவல்லது.

லிங்கத்திருமேனியில் சூரிய வழிபாடு - திருப்பட்டூர்
லிங்கத்திருமேனியில் சூரிய வழிபாடு - திருப்பட்டூர்

பங்குனி மாதத்தில் சூரிய பகவான் தன் கதிர்கள் எனும் திருக்கரங்களால், மூன்று நாட்கள் மட்டும் சிவலிங்கத் திருமேனியைத் தழுவி, பூஜித்து வழிபடுவதைத் தரிசிப்பது, நம் பாவங்களையும் கிரக தோஷங்களையும் போக்கவல்லது என்பது ஐதீகம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in