க‌ஞ்சா கும்பலுடன் தொடர்பு; ரகசியமாக களமிறங்கிய பெண் எஸ்பி: 3 காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம்

காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் எஸ்.பி 
 தீபா சத்யன்
காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் எஸ்.பி தீபா சத்யன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்த மூன்று காவலர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்திருக்கிறார் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் சிலர்,  அரசால் தடை செய்யப்பட்டுள்ள  கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள்   விற்பனை செய்பவர்களுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாகவும், அதன்மூலமாக அவர்களிடமிருந்து மாமூல் பெற்று வருவதாகவும்  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார்.  அந்த விசாரணையில் குறிப்பிட்ட சில காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையாளர்களுக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், அது மேலும் உறுதியானது.  

இதனைத்தொடர்ந்து குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும்  கஞ்சா  விற்பனையாளர்களுடன்  ரகசிய தொடர்பில்  இருந்த சோளிங்கர் காவல் நிலைய  தலைமை காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய  தலைமை காவலர் ரமேஷ், அரக்கோணம் டவுன் காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகிய மூன்று காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

அவரின் இந்த அதிரடி உத்தரவால் இதுபோன்று சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருக்கும் காவல்துறையில் உள்ள மற்றவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். மேலும் இதுபோன்று தொடர்ந்து நடவடிக்கை எடுத்து காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை களைய வேண்டும் என்று பொதுமக்கள்  அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in