`கணக்கில் இருக்கு, ஆனா பொருட்கள் இல்லை'- காவலர் நல அங்காடியில் கைவரிசை காட்டிய எஸ்.ஐ, பெண் காவலர்கள் கைது

காவலர் நல அங்காடி
காவலர் நல அங்காடி

தஞ்சையில் உள்ள காவலர் நல அங்காடியில் 40 லட்சம் மோசடி செய்ததாக உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல் ஆய்வாளர் வீராச்சாமி மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, மனோஸ்ரீ ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2021 முதல் தற்போது வரையிலான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் பல முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல பொருள்கள் விற்பனை நிலையத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் பொருள்கள் வாங்கப்பட்ட பில் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பொருள்கள் விற்பனை செய்ததற்காக எந்த ஆவணங்களும் இல்லை. இது குறித்து உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அங்காடியில் பொருள்கள் அனைத்தும் விற்பனை ஆகாததுபோல் கணக்கு காட்டியுள்ளனர். இதில் சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தணிக்கை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றபிரிவு அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். காவல் உதவி ஆய்வாளர் வீராச்சாமி, தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் கோகிலவாணி, வளர்மதி, மனோஸ்ரீ ஆகியோர் மீது 120(B), 406, 409, 381 நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் வீராச்சாமி, வீரம்மாள், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோகிலவாணி மற்றும் மனோஸ்ரீ ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் காக்க வேண்டிய காவலர்களே, சக காவலர்களுக்கான அங்காடியில் இப்படி மோசடி செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in