ஒரே நாளில் மூன்று முதல்வர்கள் பிரச்சாரம்: குஜராத்தில் அதிகரிக்கும் தேர்தல் ஜுரம்!

ஒரே நாளில் மூன்று முதல்வர்கள் பிரச்சாரம்: குஜராத்தில் அதிகரிக்கும் தேர்தல் ஜுரம்!

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில், மூன்று மாநில முதல்வர்கள் இன்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. எனினும், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், பிரதமர் மோடி தொடங்கி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வரை முக்கிய அரசியல் தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரிலும், ராஜ்கோட் மாவட்டத்தின் தோராஜி நகரிலும் நடக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் இணைந்து பங்கேற்கின்றனர். மூன்று நாள் பயணமாக இருவரும் குஜராத்துக்குச் சென்றிருக்கின்றனர்.

அதேபோல், காங்கிரஸின் சார்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் குஜராத்துக்குச் சென்றிருக்கிறார். பனாஸ்காந்தா மாவட்டத்தின் வீராம்பூர், சாபர்காந்தா மாவட்டத்தின் கேத்பிரம்மா, ஆரவல்லி மாவட்டத்தின் பிலோடா ஆகிய நகரங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, 2017-ல் நடந்த தேர்தலில் 99 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 77 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலில் காங்கிரஸைவிடவும் ஆம் ஆத்மி கட்சிதான் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறது.  விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அக்கட்சி அளித்திருக்கிறது.

இந்நிலையில், பாஜக, ஆம் ஆத்மி கட்சி என இரண்டு கட்சிகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், தேர்தல் பத்திரங்கள் மூலம் 95 சதவீத நன்கொடைகளை பாஜக பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சி தங்களுக்கு எதிராக எதிர்மறையான செய்திகள் வெளியாவதைத் தடுக்க ஏராளமான பணத்தைச் செலவழிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in