சம்பளம் கொடுக்காததால் ஆவேசம்; ஏரிக்கரையில் வீசப்பட்ட நிதி நிறுவன அதிபரின் உடல்; இளைஞர்கள் வெறிச்செயல்

கவுதம்
கவுதம்

நாமக்கல்லில் நிதி நிறுவன அதிபரை கடத்திக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பாதரையைச் சேர்ந்தவர் கெளதம் (35). கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியான இவர், பாதரை அருகே வெப்படையில் கடந்த 6 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு வழக்கம் போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டருகே சென்றபோது அங்கு காருடன் நின்றிருந்த மர்மகும்பல் கெளதமை தாக்கி மிளகாய்ப்பொடி தூவி, அவரை இரு சக்கர வாகனத்துடன் காரில் கடத்தி சென்றனர்.

கணவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது குறித்து கெளதம் மனைவி திவ்யபாரதி வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வெப்படை காவல் துறையினர் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கெளதமை தீவிரமாக தேடி வந்தனர். கவுதம் அணிந்து இருந்த செருப்பு, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட தடயங்கள் போலீஸாரால் சேகரிக்கப்பட்டன.

அரசியல் பிரமுகர் என்பதால் மேற்கொண்டு பிரச்சினை தீவிரமடையாமல் இருக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுதமை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கெளதம் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏரிக்கரையில் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கெளதமின் உறவினர்கள் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் வழக்கில் தொடர்புடையதாக கூறி தீபன், பிரகாஷ், குணசேகரன் ஆகிய மூவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் வெப்படை காவல் துறையினர் கொலைக்கான காரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெளதம் மாமனார் நிறுவனத்தில் வேலை செய்த இவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படவில்லையாம். அதே நேரத்தில் கெளதமும் தனது நிறுவனத்தில் வேலை செய்ய வைத்ததோடு, சம்பளமும் கொடுக்கவில்லையாம். இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in