வங்கி கொள்ளையில் மூவர் கைது; பாதி நகைகள் மீட்பு: அதிர்ச்சி தரும் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த 'தல’ எங்கே?

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடன் வழங்கும் கிளை
கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடன் வழங்கும் கிளை

அரும்பாக்கம் தனியார் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்துள்ள போலீஸார் கொள்ளையடிக்கப்பட்டதில் பாதி அளவு நகைகளை மீட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் ஃபேட் பேங்க் கோல்டு லோன்ஸ் கிளையில் கடந்த 13-ம் தேதியன்று காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்கநகைகள் மற்றும் பணத்தை அந்த வங்கியின் ஊழியர் முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து கொள்ளையடித்துவிட்டு தப்பினார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும் கொள்ளையர்களைப் பிடிக்கவும் நான்கு தனிப்படைகளை அமைத்திருந்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

அப்போது மூன்று கொள்ளையர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் பைகளுடன் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கொள்ளையடிப்பதற்கு முன்பாக அவர்கள் வங்கியை நோட்டமிடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இருசக்கர வாகன பதிவு எண் மற்றும் சிசிடிவியில் தெரிந்த உருவங்களின் அடிப்படையில் முதல் கட்டமாக பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தோஷ், சக்திவேல் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் பாதி அளவுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய கொள்ளையனான முருகன் எங்கே என போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த கிளையில் கடந்த இரண்டு வருடமாக மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்த அவர், தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். விரைவில் பணக்காரனாக வேண்டும் என்பதுதான் முருகனின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது.

"இந்த உலகத்தில் தப்பு சரி என்பது எதுவும் கிடையாது, நாம் செய்யும் வேலையை நியாயப்படுத்த முடியும் என்றால் அது சரி, முடியவில்லை என்றால் தவறு" என்ற வசனத்தை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்திருக்கிறார். தான் செய்யப் போகும் கொள்ளையை நியாயப்படுத்தி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு கொள்ளை அடித்து தனது லட்சியத்தை நிறைவேற்றியுள்ள முருகன் போலீஸ் கையில் கிடைத்த பிறகுதான் சரி, தவறு குறித்து சரியாக உணர்ந்து கொள்ளப் போகிறார்.
இந்த கொள்ளையில் முருகன், பாலாஜி, சக்திவேல், சந்தோஷ், சூர்யா மற்றும் மேலும் ஒருவர் என ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் மேலும் முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து மீதமுள்ள நகைகளையும் மீட்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in