பள்ளி வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் கைது!

பள்ளி வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் கைது!

திருவாரூர் மாவட்டம், வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின்  சிலையை சேதப்படுத்திய  விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வடகண்டம் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலை உள்ளது. மழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக  பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த  நிலையில் நேற்று புதன்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.  பள்ளியை தூய்மை செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் நேரு  காலை பள்ளிக்கு வந்தபோது அங்குள்ள  மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பதை  பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அவர்  ஊராட்சி மன்ற தலைவர்,  கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட  இந்த சிலையை சேதப்படுத்தியது யார் என்பதை குறித்து குடவாசல் காவல் துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டனர். 

அவர்களின் விசாரணையில்  தீபாவளி அன்று இரவு நண்பர்கள் 8 பேர் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் விளைவாக மது போதையில்  மகாத்மா காந்தியின் சிலையை அடித்து உடைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலவை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அரவிந்த் மற்றும் ஆகாஷ் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்த தேவசிவா ஆகிய மூன்று பேரையும் இன்று  கைது செய்து அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும் தப்பி ஓடிய ஐந்து நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in