கேரளத்திற்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்திற்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருவதைத் தடுக்கும்வகையில் காவல்துறை சார்பில் 30-க்கும் அதிகமான சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையின் மூலம் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை பகுதியில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தினர். ஆனால் அது நிற்காமல் சென்றது. அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் அந்தக் காரை துரத்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் ரேஷன் அரிசி கடத்திவந்த காரை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

அந்த காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதேபோல் அழகிய மண்டபம் பகுதியில் ரோந்து சென்ற அதிகாரிகள் ஆட்டோவில் வைத்துக் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் தக்கலை தபால் நிலையம் அருகில் சோதனை செய்த அதிகாரிகள் அந்த வழியாக வாழைக்குலை ஏற்றிவந்த மினி டெம்போ ஒன்றைத் தடுத்து நிறுத்தினர். அது நிற்காமல் செல்லவே அதை விரட்டிப்பிடித்து மடக்கினர். உடனே டிரைவர் இறங்கி தப்பியோடிவிட்டார். அதில் வாழை குலைகளுக்கு நடுவே ஒன்றரை டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குமரியில் இன்று ஒரேநாளில் மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in