குஜராத்திற்கு அனுப்பப்படும் ஆயிரம் முதலைகள்: தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

குஜராத்திற்கு அனுப்பப்படும் ஆயிரம் முதலைகள்: தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளைக் குஜராத்திற்கு இடம் மாற்றம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாகப் பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வடநெம்மேலியில் முதலைப் பண்ணையில், 17 வகைகளைச் சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப் பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கு பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில பகுதிகளில் வாழும் முதலைகள் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாகப் பார்வையாளர்கள் முதலைப் பண்ணைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் முதலைகள் பராமரிப்புச் செலவு, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட நிதிப் பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாமல் முதலைப் பண்ணை தவித்து வருகிறது. இதையடுத்து முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பினர்.

இதனை ஏற்ற மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், இங்குள்ள நன்னீர், சதுப்பு நில முதலைகள், அமெரிக்க முதலைகள், சையாமிஸ் முதலைகள், உப்பு நீர் முதலைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் ஆயிரம் முதலைகளை இங்கிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையில், தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in