
கனடா நாட்டு முதியவரிடம் போலீஸ் போல் நடித்து 1.20 லட்சம் ரூபாய், 80 பவுண்ட்ஸ், உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர்தாஸ்(67). இவர் கனடா நாட்டில் உள்ள பைப் கம்பெனி ஒன்றில் குவாலிட்டி செக்கிங் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கனடாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். கடந்த இரண்டு மாதங்களாக இங்கு தங்கி சென்னையை சுற்றி பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 3-ம் தேதி கனடா பணத்தை இந்திய பணமாக மாற்ற வேண்டி தி.நகரில் உள்ள மணி எக்ஸ்சேஞ்ச் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
பின்னர் பணத்தை மாற்றிவிட்டு விடுதிக்கு செல்ல வேண்டி ஆட்டோவுக்காக காத்திருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதியவர் ஸ்ரீதர்தாஸிடம் பேச்சு கொடுத்து, நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும், தி.நகரில் விடுதி ஒன்றில் தங்கி தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் தங்கியுள்ள விடுதி சரியில்லை. ஆனால் அதிக பணம் வசூலிப்பதாக தெரிவித்ததுடன் நீங்கள் எங்கே தங்கியுள்ளீர்கள். அந்த விடுதி நன்றாக உள்ளதாக என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதர்தாஸ், விடுதி நன்றாக இருப்பதாக கூறியவுடன் அந்த நபர் எனக்கு அந்த விடுதியை காட்டுமாறு கேட்டுக்கொண்டதால் கனடா முதியவர் ஸ்ரீதர்தாஸ், அவரை தன்னுடன் ஆட்டோவில் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு தனது அறைக்கு அழைத்து சென்று இருவர் பேசிக்கொண்டிருந்த போது ஸ்ரீதர்தாஸ் தூக்கமாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்க காத்திருந்த போது மர்ம நபர், "நான் கூறியது முற்றிலும் பொய். நான் தனிப்பிரிவு போலீஸ். நீ கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்து உன்னை கைது செய்ய வந்துள்ளேன்" என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த முதியவர் ஸ்ரீதர்தாஸ், நான் அப்படி எதுவும் செய்யவில்லை என பதில் அளித்துள்ளார். உடனே அந்த மர்ம நபர், உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்துவிட்டால் உன்னைவிட்டு விடுவதாகவும், இல்லையென்றால் காவல் நி்லையம் அழைத்து சென்று டவுசரை கழட்டி அடிப்போம் என மிரட்டல் விடுத்ததுடன் அவரிடம் இருந்த 1.20 லட்சம் இந்திய பணம், 80 பவுண்ட், 3000 இலங்கை பணம், செல்போன், ஷூ ஆகியவற்றை பறித்து கொண்டு தனது நண்பருக்கு போன் செய்து வரவழைத்து அவருடன் பைக்கில் தப்பி சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட கனடா நாட்டு முதியவர் ஸ்ரீதர்தாஸ் இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் தப்பி சென்ற இருசக்கர வாகன எண்ணை வைத்து அவர்களை தேடிவந்தனர். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த அஜிஷெரிப்(45), புதுக்கோட்டையை சேர்ந்த கலியமூர்த்தி(55) என்பதும், இருவரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்ததுள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.