உதவி ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்துக்கொல்ல முயன்ற வழக்கு: கோர்ட்டில் மூவர் சரண்

கடலூர் மத்திய சிறைச்சாலை
கடலூர் மத்திய சிறைச்சாலை

கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலரின் வீட்டில் தீ வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் மூன்று பேர் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவரது சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் வீட்டில் கடந்த 28-ம் தேதியன்று அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. அந்த தீ பரவுவதற்குள் விழித்துக் கொண்ட மணிகண்டனின் மனைவி மற்றும் குடும்பத்தார் பதறியடித்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த காயமும் இன்றி அனைவரும் உயிர்தப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் சென்னை எண்ணுரைச் சேர்ந்த தனசேகரன் என்ற குற்றவாளி கூலிப்படை மூலம் இதனை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் தனசேகரன் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் பறித்ததால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் நேருக்கு நேராகவே மணிகண்டனை எச்சரித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே கூலிப்படை வைத்து மணிகண்டனை குடும்பத்துடன் எரித்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு கடலூர் சிறைச்சாலையின் சிறை வார்டன் செந்தில்குமார் உடந்தையாக இருந்திருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. அதனையடுத்து அவரையும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரையும் போலீஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் தீ வைத்த குற்றவாளிகள் மூவரை தேடி வந்தனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகித்த போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மனோ என்கிற மணவாளன், கார்த்தி, இளந்தமிழன் ஆகிய மூவரும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். இவர்கள் மூவரும் தனசேகரனின் ஆட்கள் என்று சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in