கூகுள் மேப்பை நம்பி காரில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிய பரிதாபம்

கூகுள் மேப்பை நம்பி காரில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிய பரிதாபம்

கூகுள் மேப்பை நம்பி சென்றவர்கள் தரைப்பாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஓசூர் அருகே நடைபெற்றுள்ளது.

எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் தற்போதெல்லாம் வழி தெரியவில்லையே என்று கவலைப்பட வேண்டியது இல்லை. கூகுள் மேப் வசதியைப் பயன்படுத்தி தாங்கள் பாட்டுக்குச் சென்று கொண்டே இருக்கலாம். பெரும்பாலும் சரியாகவும், விரைவாகவும் அதன் மூலம் சென்று விட முடிகிறது. ஆனால் பல நேரங்களில் அதன் மூலமாக இக்கட்டை சந்திக்க வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டை சந்தித்திருக்கிறார் ஓசூரைச் சேர்ந்த ராஜேஷ்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ராஜேஷ், தனது குடும்பத்தினர் மூன்று பேருடன் காரில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் சார்ஜாபூருக்குச் சென்றுள்ளார். தற்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது போல சாலை வழியாக பயணிக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக கூகுள் மேப்பை அவர் பயன்படுத்தினார். கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கிருந்த ஒரு தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. வெள்ளத்தின் அளவை அறியாமல் தரைப் பாலத்தில் சென்ற கார் பழுதாகி பாதியிலேயே நின்றது. காரில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

,இதனால் நான்கு பேரும் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கூச்சலிட்டனர். அதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து செயல்பட்டு நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். கூகுள் மேப்பை நம்பிச் செல்பவர்கள் அண்மைக் காலமாக பள்ளத்தில் விழுவதும், வயலில் சிக்கிக் கொள்வதும், சரிவில் மாட்டிக் கொள்வதுமாக பல இக்கட்டுகளை சந்திப்பது தொடர் கதையாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in