சொற்ப வாடகைக்கு ஆசைப்பட்டு உயிரை இழந்த மூதாட்டி: நகைக்கு ஆசைப்பட்டு லேபர் கான்ட்ராக்டர் விபரீத செயல்

குற்றவாளிகளுடன் புதுச்சேரி போலீஸார்
குற்றவாளிகளுடன் புதுச்சேரி போலீஸார்

வேலைஆட்கள் தங்குவதற்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த மூதாட்டியை, நகை பணத்துக்கு ஆசைப்பட்டு தீர்த்துக் கட்டிய லேபர் கான்ட்ராக்டரையும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளியையும் புதுச்சேரி போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

புதுச்சேரி சேதராப்பட்டு காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சின்னையன் மனைவி ஸ்ரீமதி (75). உறவினர்கள் அனைவரும் வெளியூரில் வேலையில் இருப்பதால் இவர் மட்டும் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதியன்று அவரது இல்லத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவரது மகன் நாராயணமூர்த்தி புதுச்சேரி, சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு குறித்து பதிவு செய்த சேதராப்பட்டு போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா ஆதாரங்களை சேகரித்தும் மற்றும் சாட்சிகள், உள்ளூர்வாசிகளை விரிவாக விசாரணை செய்தனர்.

மேலும் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் செல்லும் நபர்களை கண்காணித்து வந்தனர். இறந்த நபரின் உறவினர்களும் விசாரணை செய்யப்பட்டனர். அத்துடன் சேதராப்பட்டு பகுதியிலுள்ள வடமாநில ஊழியர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் அவர்கள் தங்கும் இடங்கள் போன்றவற்றையும் தீவிரமாக விசாரித்தனர். அதன்மூலம் கொலைக்கான உண்மையான நோக்கம் தெரிய வந்தது.

விசாரணையின் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி ஜோன்ஸ் மகன் ஸ்டீபன்(39) மற்றும் பால பவித்ரன்(26), லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பாலா மகன் பாலபவித்ரன்(26) ஆகிய இருவரும் நேற்று மாலை தனிப்படை போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 108.9 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்ட நபரான ஸ்டீபன் சேதராப்பட்டில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் லேபர் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்திருக்கிறார். அதற்கு கான்ட்ராக்டில் வேலை செய்யும் நபர்களை மூதாட்டியின் வீட்டில் தங்க வைத்து வாடகை கொடுத்துள்ளார். அதனால் மூதாட்டி தனியாக இருக்கிறார் என்பதை அறிந்தும், அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டும் அவரது உறவினர்கள் யாரும் இல்லாத சமயத்தில் பாலபவித்ரன் உதவியுடன் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.

நன்கு தெரிந்தவர்கள் தானே என்று மூதாட்டியும் சாதாரணமாக இருந்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தனிமையில் இருந்த மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கின்றனர். அவரிடமிருந்து நகைகளையும் கொள்ளையடித்திருக்கின்றனர். கிடைக்கும் சொற்ப வாடகைக்கு ஆசைப்பட்டு தனது உயிரை இழந்துள்ளார் மூதாட்டி ஶ்ரீமதி. எனவே வீட்டில் தனியாக உள்ள முதியோர்கள் இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றனர் புதுச்சேரி போலீஸார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in