உங்கள் மகன் வேண்டுமென்றால் 1 கோடி வேண்டும்… கெடு வைத்த கடத்தல்காரர்கள்: ஸ்கெட்ச் போட்டு வளைத்த தனிப்படை!

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்

சிறுவனைக் கடத்தி வைத்துக் கொண்டு, அவனின் பெற்றோரிடம் ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டிய இரண்டு பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள அக்கராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது 4 வயது மகன் தருண் கடந்த 7-ம் தேதி இரவு வீட்டருகே இருந்த நிலையில் திடீரென காணாமல் போய்விட்டான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உறவினர் வீடுகளுக்கும் அலைபேசியில் விசாரித்ததற்கு அவன் எங்கும் செல்லவில்லை என்பது தெரிந்தது. அதனையடுத்து சிறுவனின் தாய் கௌரி, கச்சராயபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை காணாமல் போன சிறுவனைக் கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து மாவட்ட முழுவதும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சிறுவனைத் தேடி வந்த நிலையில் இன்று சின்னசேலம் அருகில் உள்ள பங்காரம் கிராமத்தில் குற்றவாளிகள் நடமாட்டம் இருப்பதாக அடிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் சிறுவன் கடத்தலில் ஈடுபட்ட கச்சிராயபாளையம் ஊத்தோடை பகுதியைச் சேர்ந்த சந்திரசோழன், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரகுபதி என்பவரைத் தேடி வருகின்றனர்.

சிறுவனைக் கடத்திய கும்பல், அவனது பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீஸார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவனை மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீஸாரை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in