சைரஸ் மரணம் தந்த பாடம்: இனி காரின் பின் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம்!

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி செப்டம்பர் 4-ல் மும்பையில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற இன்னொருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணியாததால்தான் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக என்டிடிவி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த நிதின் கட்கரி, “சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் மரணமடைந்தது ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. அவரது மரணத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பது கட்டாயம் என்பது ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான். ஆனால், யாரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இனி காரின் முன்சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலி ஒலிப்பது போல பின் சீட்டில் அமர்பவர்கள் அணியாவிட்டாலும் சைரன் ஒலிக்கும். அவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

“அபராதம் விதிப்பது முக்கிய நோக்கமல்ல. விழிப்புணர்வைப் பரப்புவதே முக்கியம்” என்று கூறிய அவர், 2024-ல் சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போட்டிருந்தால்தான் ‘ஏர் பேக்’ வேலை செய்யும். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் போடுவதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. இதைப் பற்றிப் பேசிய நிதின் கட்கரி, “ஒரு ஏர்பேகின் விலை 1,000 ரூபாய். 6 பேருக்கு 6,000 ரூபாய். ஏர்பேகுகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் அதன் விலையும் குறையும். விலை முக்கியமல்ல. மக்களின் உயிர்தான் முக்கியம்” என்றார்.

2020-ல் நடந்த சாலை விபத்துகள் குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, 11 சதவீதத்துக்கும் அதிகமான விபத்து மரணங்கள், காயமடைவது ஆகியவற்றுக்கு சீட் பெல்ட் அணியாததுதான் காரணம். இரு சக்கர வாகனத்தைப் பொறுத்தவரை சாலை விபத்துகளில் மரணமடைபவர்களில் ஹெல்மெட் அணியாதவர்களின் சதவீதம் 30.1 சதவீதம்.

தற்போது உள்ள விதிமுறைகளின்படி, கார் ஓட்டுநரும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். 2022 ஜனவரியில், ஒரு காரில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 8 ஆக இருக்க வேண்டும் என்றும், 6 ஏர்பேகுகள் காரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in