குலுக்கலில் பரிசு விழுந்ததாக மோசடி; 3 பேரை அள்ளியது போலீஸ்

கைது -சித்தரிப்பு
கைது -சித்தரிப்பு

கோவில்பட்டியில் குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாக கூறி, ரூ.14 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில், மூன்று பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமசுந்தரம் (40). இவர் ‘குலுக்கலில் இருசக்கர வாகனம் பரிசு விழுந்துள்ளதாக கூறி, ஒரு கும்பல் ரூ.14,28,860 வரை தன்னிடம் மோசடி செய்ததாக’ தூத்துக்குடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீஸார், தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துகுமார் (37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில், அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லங்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முனிரத்னம் (36), சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் மருதுபாண்டியன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், 2 டாங்கில் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 20,000  ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முத்துகுமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி சைபர்குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு இருந்ததால் அந்த வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு குறித்து சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in