தொல்லைகள் தீர்க்கும் சனி பகவான்!

சனி பகவான்
சனி பகவான்

சனிக்கிழமைகளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கினால், சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் விலகும். நம் வாழ்வில் இதுவரை இல்லாத அளவிலான சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். அம்மன் கோயில்களிலும் கூட நவக்கிரக சந்நிதியை அமைத்திருப்பார்கள். நவக்கிரகங்களில், சுபக்கிரகமாக குரு பகவானைச் சொல்லுவார்கள். அதேசமயம், நாம் அனைவருமே ஒரு கிரகத்துக்குப் பயப்படுகிறோமென்றால், அது சனி கிரகத்துக்குத்தான்.

ஒன்பது கிரகங்களிலேயே எந்தக் கிரகத்துக்கும் இல்லாத சிறப்பு... மற்ற கிரகங்களுக்கு ஈஸ்வர அந்தஸ்து இல்லை. ஆனால், சனி கிரகத்தை மட்டுமே சனீஸ்வரர் என்று போற்றுகிறோம்; வணங்குகிறோம்.

சனிப்பெயர்ச்சி வருகிறது என்றாலே, நம் ராசிக்கு என்னென்ன நன்மைகளைச் செய்யப்போகிறார். நல்லதுதான் நடக்குமா அல்லது பாடாய்ப்படுத்தியெடுப்பாரா என்று பதைபதைப்புடன் இருப்போம். உண்மையில் சனி பகவான் என்பவர் கெட்டவரெல்லாம் இல்லை. கெட்ட கிரகம் இல்லை. சனி பகவான் என்பவர் கண்டிப்பானவர். ஒரு நீதிபதியைப் போல் இருந்து செயல்படுபவர். நாம் எந்த ஜென்மத்தில் செய்த பாவமாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் செய்கிற புண்ணியமாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு, நம் வாழ்வில் நன்மைகளையும் தீமைகளையும் மாறிமாறி வழங்குவதில் வல்லவர் என சனி பகவான் குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

சனிக்கிழமைகளில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்திப்பது விசேஷம். குறிப்பாக, நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு எள் தீபமேற்றி, சனி பகவான் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்தால், சனி கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்கலாம். சனி பகவானின் பேரருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனி பகவான் காயத்ரி மந்திரம் :

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே

சாயாபுத்ராய தீமஹி

தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே

தண்டஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

எனும் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, எள் தீபமேற்றி சனீஸ்வரரை வணங்கி வழிபட்டுப் பிரார்த்தனைகள் செய்தால், சகல தொல்லைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் சனி பகவான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in