
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இப்போது இந்த பயணத்திற்கு ஒருவார காலம் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த பயணம் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏன் நிறுத்தப்பட்டது எனும் காரணம் இப்போது கசிந்துள்ளது.
இந்திய ஒற்றுமை நடைபயணம் எனும் பெயரில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். நேற்று இந்தப் பயணம் டெல்லியை அடைந்த நிலையில், இப்பயணத்திற்கு ஒருவாரம் இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை வரும் 2-ம் தேதி டெல்லியில் இருந்தே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு, கரோனா கால நடைமுறைகளைப் பின்பற்றி பாதயாத்திரையை ஒத்திவைக்க அறிவுறுத்தியது. ஆனால் அது மட்டுமே காங்கிரஸின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் காரணம் அல்ல. ராகுல் காந்தியோடு இந்த பயணம் முழுவதிலும் கலந்து கொள்வோருக்கு வசதியாக 64 கண்டெய்னர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் சகலவசதிகளும் உள்ளன. அதில் ஏசி வசதியும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் இப்போது கடுங்குளிர் வாட்டி எடுப்பதால் ஏசிக்கு பதிலாக ஹீட்டர் வைக்கும் பணிகளும், அதனோடு கண்டெய்னர் பராமரிப்புப் பணிகளும் நடக்கிறது. இதன் காரணமாக கண்டெய்னரில் தங்கி பயணிக்க முடியாது என்பதாலும் இந்த யாத்திரை ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் யாத்திரையில் உடன் பயணித்தோருக்கு டெல்லியில் விடுதிகளில் அறை கொடுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.