திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: பஞ்சரத தேரோட்டத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: பஞ்சரத தேரோட்டத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நாளை காலை முதல் இரவு வரை பஞ்சரத தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காகத் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருவண்ணாமலையில் கடந்த 27-ம் தேதி தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, டிசம்பர் 6-ம் தேதி மகாதீப பெருவிழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்காகத் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரைத் தரிசனம் செய்வார்கள். வரும் டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 7-ம் தேதி பவுர்ணமி வழிபாடு உள்ளது. இதற்காக சிறப்புப் பேருந்துகள், உள்ளூர் விடுமுறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எனப் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் அடுத்தடுத்து மாடவீதியில் பவனிவரும் காட்சியைப் பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர். நாளை காலை 5.00 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.

விநாயகர் தேரோட்டம், அருணாச்சலேஸ்வரர் தேரோட்டம், பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், சிறுவர்கள் மட்டுமே இருக்கும் சண்டிகேஸ்வரர் தேர் எனப் பஞ்ச ரதங்களும் மாட வீதிகளின் வழியாக வலம் வர உள்ளன. இந்த தேரோட்டத்தைக் காண லட்சக் கணக்கானோர் திரள்வார்கள் என்பதால், இதற்காக 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in