திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவு: 60 டன் இரும்பு சாரம் பிரிக்கும் பணி தீவிரம்

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவு: 60 டன் இரும்பு சாரம் பிரிக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து .60 டன் இரும்பு பைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர்,திருவள்ளுவர் பாறைகளுக்கு படகில் பயணிப்பது பொழுதுபோக்காக அமைந்துள்ளது. இந்த நிலையில் கடல் உப்புக்காற்றால் திருவள்ளுவர் சிலை சேதமடையாமல் இருக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது.

அதன்பின் கரோனா தொற்று காரணமாக ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெறவில்லை. தற்போது ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்மழை மற்றும் சூறைக்காற்றால் பணி தாமதமானது.

திருவள்ளுவர் சிலையில் கடல் உப்புப்படிமம் அகற்றப்பட்டு, கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி ஆகிய கலவையும், சிமென்ட் கலவையும் பூசப்பட்டன. தற்போது ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவுற்றது. இதன் தொடர்ச்சியாக 145 அடி உயரத்துக்கு 60 டன் இரும்பு பைப்புகள் கொண்டுஅமைக்கப்பட்டு இருந்த சாரத்தை பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சிலையைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in