பள்ளிக்கு தயாராகினார்... திடீரென தற்கொலை: திருவள்ளூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!

பள்ளிக்கு தயாராகினார்... திடீரென தற்கொலை: திருவள்ளூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

திருத்தணியை அடுத்துள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த பூசணம்-முருகம்மாள் தம்பதியினரின் மகள் ஜானகி (பெயர் மாற்றம்) என்பவர் திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து கொண்டு தயாரான நிலையில் பள்ளியின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி இறந்தது குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என மாணவியின் உறவினர்கள் தெக்கலூர் பகுதியில் பேருந்துகளைச் சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவி இறந்த தகவல் தெரிந்ததும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினரும் பள்ளியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதுபோல் மாணவியின் சொந்த கிராமமான தெக்கலூர் கிராமத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்ரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கள்ளக்குறிச்சி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது திருவள்ளூர் மாணவி மரணத்தில் ஏற்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in