திருப்பதி: சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான்

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நிகழ்வு
சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான்...
சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான்...

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கிய வாகன சேவை, தொடர்ந்து காலை, இரவு என இரு வேளைகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில், மச்ச அவதார அலங்காரத்தில் ஸ்ரீமன் நாராயணராக மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மச்ச அவதாரத்தில்...
மச்ச அவதாரத்தில்...

வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து மாலை கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். திருமலை சந்திரருக்குரிய திருத்தலம் என்பதால், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். 

நாளை காலை தேரோட்டம்

பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நாளை காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கோயில் எதிரே, வாகன மண்டபத்தின் அருகே உள்ள திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்தத் தேரோட்டத்திலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடிப்பர். இதனைத் தொடர்ந்து நிறைவு வாகன சேவையாக நாளை இரவு குதிரை வாகனத்தில் ஏழுமலையான் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

5-ம் தேதி சக்கர ஸ்நானம்

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான 5-ம் தேதி காலை, திருமலையில் வராக சுவாமி திருக்கோயிலின் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் (குளத்தில்) சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in