திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மகன் மாணவிக்கு பாலியல் தொல்லை: கொந்தளித்த பெற்றோர்கள்

திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மகன் மாணவிக்கு பாலியல் தொல்லை: கொந்தளித்த பெற்றோர்கள்

திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் மகன், 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றன. இந்த நிலையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவருக்கு பள்ளியின் தாளாளரின் மகன் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இன்று காலை பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தாளாளர் மகனை கைது செய்யக்கோரி பள்ளி வளாகத்திலேயே மாணவ- மாணவிகள் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், பள்ளி தாளாளரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் மறியலை கைவிட்டனர். பெற்றோர்கள், மாணவ, மாணவிகளின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, பள்ளியின் தாளாளரின் மகன் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in