திருமகன் ஈவெரா மரணம்: தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்

திருமகன் ஈவெரா மரணம்: தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ராவின் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி, சீமான், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மரணம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது மகனுமாகிய திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவெரா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எனது நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகனுமான ஈவெரா இ.திருமகன் அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி மிகுந்த பேரதிர்ச்சியை அளித்துள்ளது. திருமகன் அவர்கனை இழந்து வாடும் அவரது தந்தை இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். மகனை இழந்துவாடும் இளங்கோவன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்” என கூறியுள்ளார்

திருமகன் ஈவெராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா அவர்கள் இளம் வயதிலேயே உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. அவரது மறைவு திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். காங்கிரஸ் கட்சியினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அரசியலில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் வயதிலேயே திருமகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in