தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்: திண்டுக்கல்லில் தயாராகும் சுடுமண் விளக்குகள்

திண்டுக்கல்லில் தயாராகும் கார்த்திகை விளக்குகள்.
திண்டுக்கல்லில் தயாராகும் கார்த்திகை விளக்குகள்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் முக்கிய பங்கு வகிப்பது விளக்குகள் தான். வீடுகள் முதல் கோயில் வரை தீபங்கள் பேசும் மாதமாக திருக்கார்த்திகை மாதம் திகழ்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் சுடுமண் விளக்குகள் தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 6- ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாகவே ஒருவாரம் வீடுகளில் விளக்குகள் வைத்து தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

சுடுமண் விளக்குகள்.
சுடுமண் விளக்குகள்.
பேக் செய்யப்பட்ட விளக்குகள்.
பேக் செய்யப்பட்ட விளக்குகள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் கார்த்திகை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படவில்லை. பொதுமக்கள் எளிமையாக வீடுகளில் மட்டும் கொண்டாடினர். கோயிலுக்குச் சென்று விளக்கு வழிபாடு நடத்தபடாததால் கடந்த ஆண்டுகளில் விளக்கு விற்பனை வெகுவாக குறைந்ததால் விளக்கு தயாரிக்கும் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகளின்றி தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் பல்வேறு வகையான விளக்குகளைத் தயார் செய்யும் பணியை ஒரு மாதத்திற்கு முன்பே சுடுமண் விளக்குகள் தயாரிப்பவர்கள் துவக்கி விட்டனர்.

வித விதமான விளக்குகள்.
வித விதமான விளக்குகள்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஆண்டுதோறும் சுடுமண்ணால் பொம்மைகள், விளக்கு மாடங்கள், விநாயகர்சிலை, தீபவிளக்குகள், கொலு பொம்மைகள் என அந்தந்த விசேஷங்களுக்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை தீபவிழாவிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், பல்வேறு வகையான விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

குளத்தில் இருந்து எடுத்துவரப்படும் மண்ணைக்கொண்டு லிங்க விளக்கு, தேங்காய் விளக்கு, ஐந்துமுக விளக்கு, ஸ்டார் விளக்கு, இரண்டு அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு, குபேர விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, அன்ன விளக்கு, குத்துவிளக்கு ஆகியவற்றை தயாரிக்கின்றனர். தொழிலாளர்களின் கைவண்ணத்தில் இந்த விளக்குகள் பல்வேறு வடிவங்களில் தயாராகிறது. இவற்றைக் காளவாசலில் சுட்டு எடுக்கின்றனர். பின்னர் இவற்றிற்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விளக்குகள் தயாரித்தர ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதால் விளக்கு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தயார் நிலையில் உள்ள கார்த்திகை தீப விளக்குகள்
தயார் நிலையில் உள்ள கார்த்திகை தீப விளக்குகள்

சுடுமண் பொம்மைகள், விளக்குகள் தயாரித்துவரும் நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்த கருணாகரன் கூறுகையில், ” கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் கார்த்திகை விளக்குகள் விற்பனை பெரிய அளவில் இல்லை. ஆனால், இந்த ஆண்டு வியாபாரம் நல்லமுறையில் உள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் உற்பத்தியை முன்னதாகவே துவக்கிவிட்டோம். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விளக்குகளை மொத்தமாக விற்பனைக்கு வாங்கிச்செல்கின்றனர்.

கருணாகரன்
கருணாகரன்

இதன்மூலம் கரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட தொழில் பாதிப்பில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம். கேரளாவைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பகுதியில் பயன்படுத்தும் விளக்குகள் போல தயாரிக்க ஆர்டர்கள் கொடுக்கின்றனர். அந்தந்த மாநிலத்திற்கேற்ப விளக்குகளைத் தயார் செய்துதருகிறோம். பல்வேறு வகையான மாடல்களில் விளக்குகள் தயாரிக்கிறோம். ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை மொத்தமாக விற்பனை செய்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in