
தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆரியங்காவில் ஐயப்பன் கோயில் உள்ளது. இங்குள்ள ஐயப்பன் தனது மனைவி புஷ்பகலா தேவியோடு அருள் பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் மண்டல பூஜை கடந்த 16-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்குள்ள அய்யனுக்கும், சவுராஷ்டிரா சமுதாயப் பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக டிச.24-ம் தேதி மாலை மாம்பலத் துறையில் இருந்து புஷ்பகலா தேவியை பெண் அழைத்து வரும் வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பாண்டியமுடிப்பு எனப்படும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு முன்னதாக சாமியும்,அம்பாளும் சப்பாரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். பின்னர் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து திருமண மண்டபத்தை அடைந்தனர்.பின்னர் அங்கு தொடர்ந்து இரவு 9.மணிக்கு மேல் சாமி ஐயப்பனுக்கும், புஷ்கலா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமுதாயத்தினரும், ஆரியங்காவு ஆலய நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.