திருச்செந்தூர் முருக பக்தர்கள் இனி 110 கி.மீ வேகத்தில் ரயிலில் பயணம் செல்லலாம்

திருச்செந்தூர் முருக பக்தர்கள் இனி 110 கி.மீ வேகத்தில் ரயிலில் பயணம் செல்லலாம்

அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் நெல்லை - திருச்செந்தூர் அகல ரயில் பாதையை இரட்டைப்பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளை சிறப்பு ரயில் பயணம் மூலம் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, நிறைவடைந்த மின் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப்பணிக்கான சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டது. பாளையங்கோட்டையில் குறிச்சி உபமின் நிலையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்ட அவர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத் உப மின் நிலையம், ஆறுமுகநேரி அருகே குறுக்கிடும் தமிழ்நாடு மின்சார வாரிய மின் தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்ட முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, திருச்செந்தூர் சென்று சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மறு மார்க்கத்தில் நெல்லைக்கு வந்து சேர்கிறார். இந்த ஆய்வுப் பணிகளின்போது ரயில்வே மின் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும் என்பதால் பொதுமக்கள் மின் தடத்தை நெருங்கவோ, தொடவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களிலும் எச்சரிக்கைப் பலகைகளை வைக்கவும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த ஆய்வு அறிக்கையை அளித்த பின்னர் நெல்லை - திருச்செந்தூர் ரயில் தடத்தில் அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கத் தென்னக ரயில்வே அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த இரு வாரங்களில் நெல்லை - திருச்செந்தூர் இடையே மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்படும் என்பதால் திருச்செந்தூர் கோயிலுக்கு ரயில் பயணம் செல்லும் பக்தர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in